திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, October 30, 2010

” பேரின்பம் “ சிறுகதை

“பேரின்பம் “சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்




http://www.vallamai.com/?p=1208



அன்புடன்

தமிழ்த்தேனீ

” தவம் “

”குழந்தை வேண்டித் தவம்  செய்தல் தவம்
குழந்தையே  செய்யும் தவம்  எதை வேண்டி”

அன்புடன்
தமிழ்த்தேனீ

Tuesday, October 12, 2010

"நசுங்கல்” சிறுகதை

 வல்லமை இதழில் வெளியாகி உள்ள “நசுங்கல்” என்னும் சிறுகதை படிக்க சொடுக்குங்கள்,
தன்னுடைய மெக்கானிகல் ஷெட்டில் வந்திருந்த ஒரு காரை பழுது பார்த்துவிட்டு, இப்போ சரியாயிடிச்சி எடுத்து ஓட்டிப்பாருங்க சார் என்று அந்த காரின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான் சிவா, அங்கே ஒரு டொயோட்டா கொரோலா காரை ஓட்டிவந்து நிறுத்திவிட்டு ஏம்பா இந்தக் காரை எவனோ ஒரு மோட்டார்பைக்லே போனவன் இடிச்சிட்டுப் போய்ட்டான், தப்பு தப்பா வண்டி ஓட்றாங்க, ,பயந்துகிட்டே எப்பிடியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா ஒட்டிகிட்டு வந்தேன், முன்னாலே பம்பர்கிட்ட நசுங்கி இருக்கு பாரு டயர்லே உராயுது, இதைச் சரி செய்ய முடியுமா என்றார்


சிவா காரைப் பார்த்தான் ,செஞ்சு தரேன் சார் ,உக்காருங்க என்றான், காரின் பின்பக்கம் வந்தவன் பின்பக்க கண்ணாடியில் டாக்டர் என்று எழுதியிருப்பதைக் கவனித்து,மீண்டும் அவரை உற்று நோக்கினான்,அவனுக்கு அவர் யாரென்று நினைவு வந்தது, அவரை உட்காரச் சொல்லிவிட்டு, காரின் முன்பக்கம் வந்து நசுங்கிய பகுதியைப் பார்வையிட்டு சார் இந்த நசுக்கலை நான் சரி பண்ணித்தரேன்,ஆனா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும்,அப்பிடி இந்தப் பகுதிக்கு மட்டும் பெயிண்ட் அடிச்சா அது தனியா தெரியும், காரோட வர்ணத்துக்கு ஒத்துப்போகாது, பரவாயில்லையா? அப்பிடி இல்லேன்னா டிங்கரின் வேலையை ,முடிச்சிட்டு மொத்தமா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும் என்றான்,

இதோ பாருப்பா நீ இந்த நசுங்கலை மட்டும் எடுத்துக்குடு, ஓரளவு டயர்லே இடிபடாமெ இருந்தா சரி, மத்தபடி நான் என்னோட சர்வீஸ் செண்டர்லே விட்டு சரிபண்ணிக்கிறேன், ரொம்ப வெலை உயர்ந்த காருப்பா, டொயோட்டா கரோலா, வெலை எவ்ளோ தெரியுமா கிட்டத்தட்ட பத்து லக்ஷம் என்றார்

சரி சார் எத்தனை லக்ஷமா இருந்தா என்னா செய்யவேண்டியதை செஞ்சுதான் ஆகணும் என்று சொல்லிக்கொண்டே நசுங்கிய பகுதியின் பின்னால் ஒரு மரக்கட்டையை வைத்து முன் பக்கமாக ஒரு சுத்தியலால் டொம்மென்று தட்டினான்,

டாக்டர் நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்து என்னாப்பா இது இப்பிடி அடிக்கறே, கொஞ்சம் மெதுவா அடி ,நான் யாரையும் இந்தக் காரைத் தொடவே விடமாட்டேன், என்னோட வாழ்க்கையிலே நான் அதிகமா நேசிக்கறது இந்தக் காரைத்தான், மெதுவா மெதுவா என்றார்,

சிவா மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,ஆமாம் இதே டாக்டர் வேலைசெய்யும் மருத்துவ மனையில் அவன் உயிருக்குயிராய் நேசித்த மனைவி விமலா ஒரு விபத்தில் மாட்டிகொண்டு குற்றுயிரும் குலைஉயிருமாகக் கொண்டு போனபோது நடந்த அந்தக் காட்சி விரிந்தது

ரத்தம் வீணாகிக்கொண்டிருக்கிறது, இவன் தவித்துக்கொண்டிருக்கிறான், யாரைக் கேட்டாலும் கொஞ்சம் இருப்பா இங்கே டாக்டர்,நர்ஸ் போதிய அளவு இல்லே, கொஞ்சம் வெயிட்பண்ணு,இதோ டாக்டர் வந்திருவாரு என்றபடி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்,டாகடர் வந்தார் ,அவரிடம் விவரங்கள் சொல்லப்பட்டதுஅவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் டாக்டர்,, அவன் மனைவி விமலா நினைவில்லாமல் இருந்தாலும் வலியால் முனகிக்கொண்டிருந்தாள், டாக்டர் அவளது கையை வேகமாக இழுத்தார்,அவள் வலியால் அலறினாள்,

சிவா பதறிப் போய் டாக்டர் கொஞ்சம் மெதுவா பாத்து கவனமாசெய்யுங்க ,அவளுக்கு வலிக்கிது, அதுமட்டுமில்லை,எலும்பு உடைஞ்சிருந்தா இன்னும் அதிகமாயிடும் என்றான் பதறிப்போய், டாக்டர் இதோ பாருப்பா எங்களுக்கு தெரியும் என்ன செய்யணும் என்ன செய்யக் கூடாதுன்னு ,நீ அங்கே போயி ஒரு ஓரமா உக்காரு என்று விரட்டினார், வேறு வழியில்லாமல் தூரமாகப் போய் உட்கார்ந்து கொண்டு தெய்வங்களை வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் தன் இயலாமையை நினைத்து,



தன் மனதில் ஓடிய அந்தக் காட்சியின் வலியை மனதில் வாங்கிக்கொண்டே டாக்டரின் காரை சரி செய்துகொண்டிருந்தான் சிவா, சுத்தியலால் வளைந்த இடத்தை ஒரு அடி அடித்தான், டாக்டர் பதறிக்கொண்டு ஓடிவந்து ஏன்பா இந்தக் காரோட விலை என்னான்னு தெரியுமா,இப்பிடிப் போட்டு அடிக்கிறியே மெதுவா பாத்து நிதானமா செய்யிப்பா என்றார் அதிகாரமான குரலில்

டாக்டர் போன மாசம் விபத்து நடந்த என் மனைவிக்கு ஆப்ரேஷன் செஞ்சீங்களே நியாபகம் இருக்கா, நோயாளிகள் குடுத்த பணத்திலே வாங்கின காரையே இவ்வளவு மதிக்கிறீங்களே, என் பொண்டாட்டி உயிரு இதைவிடக் கேவலமா? நான் பதறினப்போ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஒரு கணவனோட பதட்டத்தை மதிக்காம எப்பிடி வெரட்டினீங்க

என்கிட்ட கொண்டு வந்து காரை விட்டுட்டீங்க இல்லே,எனக்குத் தெரியும் எப்பிடி சரி செய்யணுன்னுட்டு, போயி அங்கே ஒரு ஓரமா உக்காருங்க என்றான், டாக்டரின் மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,எவ்வளவு நேரம் போனது என்றே தெரியவில்லை,

டாக்டர் சார் …உங்க காரை சரி செஞ்சுட்டேன் என்ற சிவாவின் குரல் கேட்டு மோனம் கலைந்தார் டாக்டர் , கார் நசுங்கிய இடம் இப்போது சரியாக இருந்தது,

என்னை மன்னிச்சுடுப்பா ..இனிமே நான் யாரையும் கோவமா பேசமாட்டேன் என்றார் டாக்டர்,

நசுங்கி இருந்த அவர் மனதையும் சரிசெய்துவிட்டான் அந்த மெக்கானிக்

அன்புடன்

தமிழ்த்தேனீ














அன்புடன்

தமிழ்த்தேனீ

Friday, October 8, 2010

நவராத்திரி

 “ நவராத்திரி “

         






நவராத்திரி என்றதும் என் நினைவுகள் என்னுடைய சிறுவயதுக்காலத்துக்கு பின்னோக்கி ஓடிவிட்டன, அப்போது நாங்கள் சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலயம், ஒற்றைவாடை நாடக அரங்கம் போன்றவைகள் இருக்கும் வால்டாக்ஸ் சாலையும் உயர் நீதிமன்றம், கலங்கரை விளக்கம், போன்றவை இருக்கும் சைனாபஜார் என்று சொல்லப்படும் சுபாஷ் சந்திர போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் 18 வெங்கட்ராயர் தெருவு, பீ ஆர் ஸ்கொயர், என்னும் பகுதியில் இருந்தோம் அந்தப் பகுதியில் நான் இருக்கும்போது எனக்கு வயது பதினொன்று

நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால் எங்களுக்கு ஆனந்தம் கரைபுரண்டோடும், பள்ளியில் விடுமுறைவிடுவார்கள், புது சொக்கா புது நிஜார், புது பாவாடை, புதுப் புடவை, பட்டாசுகள் இனிப்புகள் என்று ஆனந்தமாக பொழுதுகள் கழியும், ஊரே திமிலோகப்படும்,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாபோன்று களைகட்டும், எங்கள் வீட்டில் என்னுடைய தகப்பனார் ஒன்பது படிகள் வைப்பார்,அந்த ஒன்பது படிகள் முழுவதும் விதம் விதமான பொம்மைகள் அலங்கரிக்கும்,

பரணிலிருந்து பெரிய பெரிய பெட்டிகளை இறக்கி அவைகளில் துணிகளிலும், காகித்த்திலும் பத்திரமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை எடுத்து கீழே அடுக்கி,மிக ஜாக்கிறதையாக அவைகளைப் பிரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றின் உயரம்,பருமன்,போன்ற வித்யாசங்களைக் கவனித்து, அந்தந்த பொம்மைகளை அந்தந்த தொடர்பான பொம்மைகளோடு அடுக்கி வைத்து ,அவைகளை எந்தப் படியில் வைக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றார்ப்போல் அவைகளைப் படியில் வைத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பார் எங்கள் தந்தை,கூடவே என்னுடைய தாயாரும்,என்னுடைய சகோதரிகளும் உதவி புரிவார்கள்,அது ஒரு பொற்காலம்,

ஆமாம் உண்மையிலேயே அது ஒரு பொற்காலம்தான்,

மாலையானால் போதும் , சின்னஞ்சிறார்கள்,சிட்டுப் போன்ற குழந்தைகள் ராமனாகவும்,கிருஷ்ணனாகவும், சரஸ்வதியாகவும் ,மஹாலக்ஷ்மியாகவும், ஆண்டாளாகவும்,காமாக்ஷியாகவும் ,மீனாக்ஷியாகவும் வேடமிட்டு அவர்களின் வயதுக்கும் தோற்றத்துக்கும் சற்றும் பொருந்தாவிடினும் கூட, அவர்கள் கள்ளமில்லாத குழந்தை மனத்தினராய் தளுக்கி , மினுக்கி புன்னகையுடன் வலம் வருவதைப் பார்க்க முடியும், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமாய் வாழ்ந்த அந்நாளில் குழந்தைகள் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைகளாகவே இருந்தார்கள், பெண்மணிகளும் புதுப்புடவை சரசரக்க வந்து கூடத்தில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பில் அமர்ந்து, இயல்பான புன்னகையுடன் இதமான குரலில் பலவகையான பாட்டுக்களை தங்களுடைய இனிமயான குரலில் பாடுவதும், குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து கீதமிசைப்பதுமாக ஒவ்வொரு பண்டிகைகளும் களைகட்டும்,

ஒவ்வொரு வீட்டிலும் அளிக்கும் தின்பண்டங்கள், சுண்டல் போன்றவற்றை வாங்கவே கூட்டம் கூடும் சிறுவர்கள் கும்மாளமாக மகிழ்ழ்சியுடன் உலா வருவதைப் பார்க்கும் போது மனம் நிறையும்,

பெரியவர்களும் தங்களின் இயல்பான ஆர்ப்பாட்டம் ,கோவம், எல்லாவற்ரையும் மறந்து புது வேட்டி புது சொக்காய் சகிதமாக வீட்டில் உள்ள பெண்டிருக்கும் ,குழந்தைகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும், மகிழ்ந்த அந்தக் காலங்கள் பொன்னானவை



அப்படிப்பட்ட பொன்னான தருணங்கள் நாட்டிலே சுபிக்ஷம் நிறைந்த அந்தப் பொன்னான காலம் , குழந்தைகளின் கபடமற்ற பொன்னான காலம்

அவையெல்லாம் திரும்பி வருமா நம் நாட்டில்?

பஞ்ச பூதங்களின்மகிமை உணர்ந்து அவைகளை இயற்கையை அரவணைத்துக்கொண்டு இதமாக பதமாக இனிமையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்கள் திரும்பி வருமா? என்னும் எண்ணம் தோன்றி ஒரு பெருமூச்சு விட வைக்கிறது என்ன செய்ய?

மீண்டும் நாம் இழந்த அந்தப் ;பொற்காலத்தை மீட்டவேண்டும்,அதற்காக நம் பாரம்பரியங்களின், ,மரபுகளின் வளத்தை இனிமையை மீண்டும் தெளிவான மனநிலையுடன் மீண்டும் அனுபவிக்க மனம் துடிக்கிறது

மாறுமா மீண்டும் பொற்காலம் மலருமா என்னும் ஏக்கத்துடன் நான்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Tuesday, October 5, 2010

கடல் கடந்தும் கலை

அமெரிக்காவில் சியாட்டில் மாகாணத்தில் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் பணிபுரியும் என் மகன் திரு கே வெங்கடநாதன் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பல இளைஞர்கள்,யுவதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு சியாட்டில் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக இண்டஸ் கிரியேஷன்ஸ் என்னும் பெயரில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறார், இதில் விசேஷமான செய்தி என்னவென்றால் இந்தக் குழுவை நடத்தும் இவர்களே நாடகம் எழுதுகிறார்கள், இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், அதுகூட வியக்கத்தக்க செய்தி அல்ல, இவர்களே மேடை நிர்வாகமும் செய்கிறார்கள்,மேலும் மேடை அரங்கத்தையும் இவர்களே திட்டமிட்டு உருவாக்கி நிர்வகிக்கிறார்கள்,இசை இவர்களே அமைக்கிறார்கள், ஒலி ஒளி மற்றும் மேடை நிர்வாகம் உட்பட அனைத்து கலைகளையும் இவர்களே வடிவமைக்கிறார்கள் நேற்று கூட ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்,இந்த நாடகங்களுக்கு என்னுடைய மருமகள் திருமதி கவிதா அவர்களும் ஓவியம் வரைதல், போன்ற பல வர்ணம் பூசும் கலைகளை உருவாக்குகிறார், அரங்கில் உள்ள பல காட்சிகளில் இவரது கைவண்ணம் இருக்கிறது


கணிணிப் பொறியாளர்களான இவர்கள் தச்சு வேலை உட்பட அனைத்து வேலைகளையும் இவர்களே தங்கள் கைகளால் செய்து , மேடையில் அரங்கை நிர்மாணிக்கிறார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்க செய்தி


தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மிக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் ,கடல் கடந்தும் தமிழன் கலை மிளிர்கிறது

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கிப் பாருங்கள், இவர்களின் திறமை புரியும், வாழ்த்துவோம், பாராட்டுவோம்



http://www.youtube.com/watch?v=-4PhUFwBT0g



அன்புடன்

தமிழ்த்தேனீ





Sunday, October 3, 2010

விரஜா நதி ஓரம்

விரஜா நதி ஓரம் அந்த நதியைக் கடக்க காத்திருந்த பல பயணிகளில் ஒருவர் ராமசேஷன், அவருக்கு நினைவு வந்தது, திருமோகூர் காளமேகப் பெருமான் வந்து கையைபிடித்து அழைத்துச் செல்வாராமே, அதற்காக காத்திருந்தார், காத்திருந்த வேளையில் அவர் உடலை விட்டுவிட்டாலும் அவரை விடாத மனம் கூடவே இருந்து யோசித்துக்கொண்டிருந்தது,


இந்த பிறப்பை எடுத்தோமே ,இந்தப் பிறப்பில் என்ன செய்தோம், ,பாவம் செய்தோமா, புண்ணியம் செய்தோமா? நமக்கு நரகம் கிட்டுமா, சொர்கம் கிட்டுமா என்று தெரியாமல், பூமியிலும் இல்லாமல், ப்ரபஞ்ச வெளியிலும் இல்லாமல் நடுவே ஏதோ ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தார் ராமசேஷன், அவருக்கு சிரிப்பாய் வந்தது,

ஆமாம் இப்போதும் தமக்கு ராமசேஷன் என்று தான் பெயரா ,அல்லது யாராவது வந்து தனக்கு வேறு பெயர் வைப்பார்களா என்று யோசித்தார், சரி இனி பெயரில் என்ன இருக்கிறது, போய்ச்சேரும் இடமல்லவா முக்கியம், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவராயிற்றே அவர்,

ஆமாம் ஆரியக் கூத்தென்றால் என்னது அது?
ஆரியனுக்கு ஏது கூத்து? என்று யோசிக்கும் போதே ஆரியன் ஆடாத கூத்தா? என்கிற கேள்வியும் முளைத்தது, எப்படி இந்தச் சொல்வழக்கு வந்தது என்று யோசிக்கலானார்,

இப்படியே காத்திருந்தால் கால்கள் வலிக்குமே எங்காவது உட்காரலாமா? அடேடே இந்த சூக்க்ஷும சரீரத்துக்கு கால்களும் இல்லை,கால்கள் இருந்தால்தானே வலிக்கும், உடல் இருந்தால்தானே வலி தெரியும், திடமான உருவமும் இல்லையே எங்காவது உட்கார்ந்தால் எப்படி உட்கார்ந்தாலும் அப்படியே காற்று போன பலூன் மாதிரி நைந்த துணி மாதிரி எதிலும் ஒட்டாமல் எப்படியும் இருக்கவிடாமல் அலைகிறதே இந்த சூக்ஷும சரீரம்?

அவருக்கு தன்னுடைய கடைசீக் காலம் நினைவுக்கு வந்தது, மனித உடல் இருந்த காலங்களில் அந்த உடலில் சர்க்கரை அதிகமாயிருக்கிறது,அரிசி சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னது ஞாபகம் வந்தது, கூடவே அவருடைய மகன் அவருக்கு திவசம் செய்யும்போது இதை ஞாபகம் வைத்திருப்பானா? அவன் யோசிக்காமல் அரிசி சாதத்தையே படைத்தால் எப்படி சாப்பிடுவது, மறுபடியும் சர்க்கரை அதிகமாகி விடுமே , என்று யோசித்து அவருக்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்,

இந்த சூக்ஷும சரீரத்துக்கு வியாதிகள் உண்டா? ரத்தமும் சதையும் கொண்ட மானுட சரீரத்துக்குதானே வியாதிகள் இந்த சூக்ஷும சரீரத்துக்கு கிடையாதே என்று யோசித்துவிட்டு மீண்டும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்

யாரோ ஒருவர் கைகொடுத்தார்,ஏன் உனக்கு நீயே யோசித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் யாரேனும் பார்த்தால் பயித்தியம் என்பர் என்று ஒரு குரல் கேட்டது

நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் ,கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை

ஓ கண்ணே இல்லை பின் எது புலப்படும் ?

கை கொடுத்தவர் கேட்டார் நீ மீண்டும் பிறக்க விரும்புகிறாயா?

அட காதுகளும்தான் இல்லை பின் எப்படி அவர் பேசுவது கேட்கிறது

இல்லை..கேட்கவில்லை மனதுக்கு புரிகிறது

யோசித்தார் எனக்கு இனி பிறவி வேண்டாம் என்றார்,


உடனே அந்த அமானுஷ்யக் குரல் இன்னும் நீ அந்த நிலையை எட்டவில்லை ஆகவே இனியும் உனக்கு பிறவி உண்டு, ஆகவே எப்படி, யாராகப் பிறக்க விரும்புகிறாய் என்று மட்டும் சொல் என்றது,

ராமனாகப் பிறந்தால் கானகம் ஏகி மனையாளைப் பிரிந்து தவிக்க வேண்டும்

பரசுராமனகப் பிறந்தால் தாயின் தலையையே வெட்ட வேண்டும்,

கிருஷ்ணனாகப் பிறந்தால் நல்லதே செய்துவிட்டு கெட்ட பெயரும் சம்பாதித்து பின் குறைக் கொள்ளியாக ஒதுங்க வேண்டும்
சரி பூலோக வாசிகளான மானுடரில் பலரையும் யோசித்துப் பார்த்தார், மஹாத்மா காந்தியாகப் பிறந்தால் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்டுவார்

இப்படீ ஒவ்வொன்றாக யோசித்துக்கொண்டே வந்தார்

யாரை நினைத்தாலும் ஒவ்வொன்று தடுத்தது

சரி மீண்டும் ராமசேஷனாகவே பிறக்கலாம் என்றால் இப்படி அடுத்த ஜென்மம் யாராக எடுக்கலாம் என்று யோசிக்கும் நிலை வரும்

அவருடைய மனம் குழம்பியது

எனக்குத் தெரியவில்லை நீயே ஒரு முடிவெடுத்து ஒரு பிறப்பைக் கொடு என்று வேண்டினார்

இப்போது தெய்வம் குழம்பியது ,யோசித்தது, தனக்குத்தானே பேசிக்கொண்டது சிரித்துக்கொண்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ