திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, June 19, 2011

காதலென்றால் “  சிறு கதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்
http://www.vallamai.com/?p=4202


கார்லேருந்து எல்லாத்தையும் எடுத்திடேன்.என்றபடி சுப்புலட்சுமியும் சிவாவும் உள்ளே வந்தனர்.சரி. நானும் கிளம்பறேங்க. வீட்டிலே அம்மா காத்துகிட்டு இருப்பாங்க சார் ரிடையர் ஆற நிகழ்ச்சியைப் பாக்கணும்னுதான் வந்தேன்

இரு சிவா, கைகால் ஓடவிடாம ஆக்காதே! ஒருவாய் காப்பிதண்ணி குடிச்சிட்டு, அப்புறமா போ!என்றபடி உள்ளே போய் காப்பியை எடுத்திட்டு வந்து கர்த்திகேயனுக்கும்..சிவாவுக்கும் கொடுத்தாள்.

காலைலே 7 மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீசுக்கு போய்ட்டீங்கன்னா சாயங்காலம் 7 மணியாவும் வரதுக்கு….., இனிமே எப்பிடி பொழுது போகும் உங்களுக்கு? ஏதாவது ப்ளான் வெச்சிருக்கீங்களா?” என்றான் சிவா.

டேய் சிவா! நீ என் மனசில ஓடறதை சரியாக் கண்டுபிடிச்சா மாதிரி கேள்வி கேக்கற! அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன். எனக்கு அந்த வேலையை விட்டா வேறு ஒண்ணும் தெரியாது.. ஏதோ இதுவரைக்கும் வேலை கொடுத்த அந்த ஆபீசுக்காகவே, யோசிச்சு, யோசிச்சு வேலையை நேர்மையா செஞ்சிட்டேன். இது வரைக்கும் ஒருநாள் கூட லீவு எடுத்ததில்லே. அதுக்காகவே எங்க எம்.டீ. மேடையிலே என்னை எப்பிடிப் பாராட்டினார் பாத்தியா! எப்போ வேணா மறுபடியும் வேலை செய்யணும்னு எண்ணம் வந்தா இந்த ஆபீஸ் உங்களுக்கு கதவைத் திறந்தே வெச்சிருக்கும்னு சொன்னார். கவனிச்சியா?” என்றார் கார்த்திகேயன்.

சார் சொல்றேன்னு…….. தப்பா நினைக்காதீங்க! எல்லோருமே மேடையிலே அப்பிடித்தான் பாராட்டுவானுங்க, அதெல்லாம் நம்பிகிட்டு அங்க போய் நிக்காதீங்க மதிக்கமாட்டாங்க. அதெல்லாம் மேடை நாகரீகம் அத்தோட சரி.என்றான் சிவா. 
நீங்க ஒண்ணு செய்யலாம், நாலு பேரை வெச்சிகிட்டு உங்க அனுபவத்தை, அதும் மூலமா கிடைச்ச அறிவை, யுக்திகளை எல்லாம் யாருக்காவது சொல்லிக்குடுங்க. நல்ல பொழுது போக்கா இருக்கும். எல்லோருக்கும் உதவியாகவும் இருக்கும். சரி, நான் கிளம்பறேன்”. என்றபடி சிவா கிளம்பினான்.

ஏனுங்க இப்பவே மணி எட்டாவுது. ஏதாவது கொஞ்சம் சாப்டுட்டு ரெஸ்ட் எடுங்க…. உழைச்சதெல்லாம் போதும்!இந்த வேலையில், உங்க உழைப்பிலே படிப்படியா முன்னுக்கு வந்து, நம்ம பிள்ளைங்களுக்கு நம்மால் முடிஞ்ச படிப்பைக் குடுத்து கல்யாணமும் செஞ்சு முடிச்சிட்டோம்! அந்த முருகன் புண்ணியத்திலே, எல்லோரும் நல்லா இருக்காங்க. இனிமே பெரிய பொறுப்புன்னு எதுவும் நமக்கு இல்லே. நல்ல நல்ல புத்தகமா வாங்கிப் படிங்க, கொஞ்ச நேரம் டீவி பாருங்க, மனசை அமைதியா வெச்சிக்கிட்டு நீங்க அமைதியா இருக்கற வழியைப் பாருங்கஎன்றாள் சுப்புலட்சுமி.

எங்க ஆபீசிலே நான்தான் மேனேஜர், அங்கே நான் சொன்னதை எல்லோரும் செய்வாங்க. இங்கே நீதான் மேனேஜர். இனிமே நீ சொல்றதை நான் செய்யணும்! தாய்க்குப் பின் தாரம்னு சொல்லுவாங்க!என்றார் கார்த்திகேயன் சிரித்தபடி.
மாங்க! என்னைக் கிண்டல் செய்யலேன்னா உங்களுக்கு பொழுது போவாதே. நான் நல்லதைத்தான் சொல்லுவேன். நான் சொல்றதைக் கேட்டா நல்லதுதான் நடக்கும்”. என்ற சுப்புலட்சுமி தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தாள்.

அந்த சீரியலில் ஒரு பெண் தன் காதலனிடம் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தாள் . ”ரமேஷ் என்னை ஏமாத்திடலாம்னு நெனைக்காதே……., என்னைக் காதலிச்சுட்டு வேற ஒருத்திய நீ கல்யாணம் கட்டிகிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன். உன்னையும் வாழவிடமாட்டேன்.” என்றாள் முகத்தை கர்ண கடூரமாக வைத்துக்கொண்டு.

காதல், காதல், காதல், இந்தக் காதலைவிட்டால் பேசறதுக்கு எழுதறதுக்கு வேற எதுவுமே இல்லையா………?” எரிச்சலோட டீவியை அணைத்தார் கார்த்திகேயன்.  இவ ஏன் இப்பிடி ராட்சசி மாதிரி கத்தறா? இவளை எப்பிடி இவன் காதலிச்சான்? முட்டாள்! முட்டாள்!என்றார் கார்த்திகேயன்.

நீங்க இதுவரைக்கும் சீரியல் எல்லாம் பாத்ததில்லே. அதனால்தான் குழப்பம் இல்லாம தெளிவா இருக்கீங்க! நேஷனல் ஜியாகரபிக் ன்னு ஒரு சேனல் இருக்கு. அனிமல் ப்ளானட்டுன்னு ஒண்ணு இருக்கு இதெல்லாம் பாருங்கோ! ட்ராவல் அண்ட் லிவ்விங் ன்னு ஒரு சேனல் இருக்கு அதைப் பாருங்கோ! இனிமே ரெண்டு பேரும் கிளம்பி எல்லா ஊரையும் சுத்திப்பாக்கலாம்!என்றாள் சுப்புலட்சுமி.

இதோ இந்தப் புத்தகத்தை பொரட்டினா, முதல் பக்கமே காதல்ன்னு ஒரு கவிதை, டீவியோட லட்சணம் தெரிஞ்சு போச்சு! ஏன் இப்பிடி எல்லோருமே காதல், காதல்னு இதைப் பத்தியே பேசிண்டிருக்கானுங்க. இத விட்டா பேசறதுக்கும், எழுதறதுக்கும், சினிமா எடுக்கறதுக்கும் வேற ஒண்ணுமே இல்லையா…. ? எப்பிடி எல்லோருக்கும் மூளை இப்பிடி வறண்டு போச்சு? அது சரி இந்தக் காதலப் பத்தி உன் அபிப்ராயம் என்ன?” என்றார்.

சுப்புலட்சுமி காதலைப் பத்தி பேசற வயசைப் பாரு …… இதப்பத்தியெல்லாம் எனக்கொண்ணும் தெரியாது. உங்களை எனக்கு கல்யாணம் கட்டி வெச்சாங்க. வாழ்ந்து நம்ம கடமையை நெறைவேத்தியாச்சு. அவ்ளோதான் எனக்குத் தெரியும்! தனித்தனியா பொறந்தோம், ஒண்ணா சேர்ந்தோம், தனித்தனியா போகப்போறோம், இதுலே காதல்னா என்னான்னு சொல்றது?”

உங்களுக்கு என்னைக் கல்யாணம் கட்டிக் குடுக்கும்போது, எங்கம்மா சொன்னாங்க…. ’நீயும் சந்தோசமா இரு. உன் புருசனையும் சந்தோஷமா இருக்க விடுன்னு, அதைத்தான் நானும் செஞ்சுகிட்டு இருக்கேன். இப்போ காதலிக்கறவங்க யாரு சந்தோசமா இருக்காங்க..? சரிங்க எனக்குத் தூக்கம் வருது, உங்களுக்கு கிச்சன்லே பால் காச்சி வெச்சிருக்கிறேன், ’மறந்து போயிட்டுதுன்னு அப்பிடியே வெச்சிட்டு தூங்கிடாதீங்க! எறும்பு மொச்சிடும். குடிச்சிட்டு வந்து, நேரத்தோட துங்குங்கஎன்றபடி உள்ளே போனாள் சுப்புலட்சுமி.

அப்பிடியே சோபாவில் உட்கார்ந்து அசை போடத் துவங்கினார். கார்த்திகேயன், சற்று நேரம் சென்றபின் பாலை எடுத்து குடித்துவிட்டு படுக்கை அறைக்குப் போன கார்த்திகேயன் சுப்புலட்சுமியைப் பார்த்தார். அவள் நல்ல தூக்கத்தில் இருந்தாள்.கள்ளங் கபடம் இல்லாதவ! படுத்தா உடனே தூங்கறா!அருகே சென்று குனிந்து போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டுப் படுத்தார்….

காதல் என்றால் என்னவென்று புரிந்தது அவருக்கு

அன்புடன்
தமிழ்த்தேனீ


Monday, June 13, 2011

“அப்பிடி ஒண்ணும் இல்லே ”  ஒரு சுவையான கற்பனையை படிக்க  சொடுக்குங்கள்
 http://www.vallamai.com/?p=4006

கடவுளை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு

நானும் கடவுளிடம் சில சந்தேகங்கள் கேட்டேன்

அவரும் பதில் சொன்னார் கடைசியில் தெளிந்தேனா? குழம்பினேனா?

நான் : கடவுளே உலகில் எத்துணை இன்பம் வைத்திருக்கிறாய், ஆனால் உனக்கு ஏன் இந்தப் பாரபட்சம்? சிலருக்கு மட்டும் கிடைக்கச் செய்கிறாய், பலருக்கு கிடைப்பதே இல்லை ஏன் இப்படி ?

கடவுள்: உன் கேள்வியே தவறு, எல்லாவித இன்பத்தையும் நான் படைத்து உங்கள் அனைவரையுமேதான் அனுபவிக்கச்சொன்னேன் .ஆனால் நீங்கள் பணம் என்று ஒன்றை உண்டாக்கிவிட்டீர்கள். அந்தப் பணத்திற்கு அளிக்கும் மதிப்பை உங்களையெல்லாம் உண்டாக்கிய எனக்கு கூட அளிப்பதில்லை.

நீங்கள் உருவாக்கிய பணத்தை யார் அதிகமாக சம்பாதிக்கிறீர்களோ அவர்கள் மட்டும் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள், மற்றவர்கள் அனுபவிக்க முடியாதபடி நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து விட்டீர்கள்.அந்த விலை கொடுத்தால் யார்வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் அதில் தடையில்லை என்னும் நிலையை உருவாக்கி விட்டீர்கள்,நானென்ன செய்வது

நான் : அது சரி ஏன் இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறீர்! சற்றே அமைதியாக பேசுங்களேன்

கடவுள்: ஆமாம் எனக்கே மூச்சு முட்டுகிறது இந்தப் பணத்தை நினைத்தால். கோவம் வருகிறது, நீங்கள் கண்டு பிடித்த பனத்தை ஈட்ட என்னையே கேவலப்படுத்திவிட்டீர்கள்.

என் மனைவிக்கு லக்‌ஷ்மி என்று பெயரிட்டீர்கள் சரி , ஆனால் அவள்தான் செல்வத்துக்கு அதிபதி என்றீர்கள் அதுவும் சரி, அதென்னப்பா நீங்கள் வீட்டில் மாட்டும் நாட்காட்டிகளிலும், உங்கள் பூஜை அறையில் இருக்கும் லக்‌ஷ்மியின் திரு உருவப் படத்திலும் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி ஏதோ தங்கக் காசுகளைக் கொட்டுவது போல அச்சடிக்கிறீர்கள்? பணமழை பொழிவது போல அச்சடிக்கிறீர்கள்? நீங்கள் கண்டு பிடித்த பணத்தை எப்படி எங்களிடம் எதிர் பார்க்கிறீர்கள் என்றே புரியவில்லை,

அது மட்டுமா நீங்கள் கண்டு பிடித்த பணத்தை ஈட்ட திருட்டு, கள்ளக்கடத்தல், கொள்ளையடித்தல், விபசாரம், சாராயம், குழந்தைகள் கடத்தல், தாலிக்கொடி பறித்தல், சந்தன மரம் கடத்தல், நாட்டு ரகசியங்களை அன்னிய நாட்டுக்கு விற்றல், கட்சி மாறுதல், எல்லாத் துறைகளிலும் லஞ்சம் வாங்குதல் பங்கு மார்க்கட்டு பேரங்கள் ,மொத்தமாக நாட்டின் செல்வத்தையே சுறண்டி உங்கள் வீட்டுக்குள் கொண்டு போய் வைக்க மெகா ஊழல்கள்

இத்தனையும் செய்கிறீர்கள்.

அதைக் கூட பொறுத்துக்கொள்கிறோம், ஆனால் எங்களுக்கு கோவில் கட்டி திருவுருவ வடிவில் எங்களை நிறுவனம் செய்து, தினமும் எங்கள் தலைமேல் தேன் ,பால், பஞ்சாமிருதம், போன்றவைகளை ஊற்றி ஊற்றி எங்களை திக்குமுக்காடச் செய்து நீங்கள் உங்கள் தலைக்கு மேல் கைகளை உயரத் தூக்கி நாங்கள் படும் கஷ்டங்களை பார்க்கச் சகிக்காமல் கண்களை வேறு மூடிக்கொண்டு ஏதோ எங்களையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் பார்ப்பது போன்ற ஒரு பாவனையில் பக்திமான் வேடம் போடுகின்றீர்கள்.

இத்தனையும் செய்து விட்டு எங்களைக் காவல் காக்க காவல்காரர்களை நியமிக்கிறீர்கள். அந்தக் காவல்காரர்கள் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு எங்கள் கதவருகே வாயிலெடுத்துக்கொண்டே படுத்துக்கொள்கிறார்கள், நாற்றம் குடலைப் பிடுங்குகிறது, கதவை வேறு பூட்டி விடுகிறீர்கள் ஓடக்கூட முடியவில்லை, இவ்வளவு சிரமங்களையும் பட்டு உங்களைக் காக்கிறோம் நாங்கள், ஆனால் நீங்கள் எங்கள் திருவுருவங்களையே நீங்கள் கண்டு பிடித்த பணத்துக்காக கடத்தி விற்கிறீர்கள்.

எங்கள் உண்டியலில் நீங்களே காசு போட்டுவிட்டு இரவில் அந்த உண்டியலை நீங்களே உடைக்கிறீர்கள், அதற்கு தடையாயிருக்கும் காவல்காரரை கொலை செய்கிறீர்கள்

கள்ளத்தனமாக சேர்த்த பணத்தையெல்லாம் எங்கே வைப்பது என்றே தெரியாமல் ஒவ்வொரு மடாதிபதிகளைத் தேடிச் சென்று அவர்களிடம் கொடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள், அதன் பிறகு உங்கள் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து விட்டதே என்றுணர்ந்து அவர்கள் மேல் ஏதேனும் குற்றம் சுமத்தி அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிறீர்கள்.

இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் உங்களுக்கு அளித்த சுகபோகங்கள் பாரபட்சமானவை என்று என்னிடமே கேட்கிறீர்கள் . கோபம் வராமல் என்ன செய்யும் ?

நான்: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் .மீண்டும் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்க முடியுமா?

கடவுள்: முடியும் ஒரு வழி இருக்கிறது நான் சொல்கிறேன்! சரி உலகில் உள்ள இன்பங்களில் இது வரை நீ அனுபவித்த இன்பங்களில் மன நிறைவு கண்டாயா? அப்படியானால் அவைகளை சொல். நான் உனக்கு அந்த இன்பங்களைத் தவிர்த்து வேறு இன்பங்களைத் தருகிறேன், இது வரை யார் அனுபவிக்கவில்லையோ அவர்களுக்கு அந்த இன்பங்களை பகிர்ந்து தருகிறேன்

நான் : நியாயமாகத்தான் தெரிகிறதுநான் யோசிக்க வேண்டும் சற்றே நேரம் கொடுங்கள்

கடவுள்: சரி காத்திருக்கிறேன்

நான் : நான் யோசித்தேன்

கடவுள்: கண்டு பிடித்தாயா ஒரு பட்டியல் கொடு அவற்றை நீக்குகிறேன்.

நான் :அப்படி ஒண்ணும் இல்லே நான் யோசித்ததில் நான் நிறைவாக அனுபவித்த இன்பம் ,அதுவும் இனி நான் அனுபவிக்காமல் விட்டுத்தரும்படியாக

அப்படி ஒண்ணும் இல்லே “!

கடவுள்: அடப்பாவி ! அப்படியானால் நீ மற்றவருக்கு விட்டுத் தர ஒன்றுமே இல்லையா உன்னிடம்?

நான் : ஆமாம்அப்பிடி ஒண்ணும் இல்லே” ! அது சரி என்கிட்ட கேட்கிறீர்களே உங்க்ளுக்கு வேண்டுதல், படையல், குடமுழுக்கு, கும்பாபிசேகம், திருவீதிப் புறப்பாடு, எல்லாம் வெச்சிருக்கோமே அதிலே இனிமே உங்களுக்கு இனி என்னென்ன வேண்டாம்ன்னு நீங்கள் ஒரு பட்டியல் போட்டுத் தருவீர்களா? நாங்களும் ஏற்கெனவே நீங்கள் அனுபவித்து திருப்தி அடைந்ததெல்லாம் நீக்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறோம்

கடவுள் நானும் யோசிக்கிறேன்…… சற்றே இடைவெளிக்குப் பின்னர்

கடவுள்: இல்லை யோசித்தேன் அப்படி ஒண்ணு இல்லே!

கடவுள் மறைந்து போனார். தேடிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்

தமிழ்த்தேனீ